கென்னடி விக்ரம் ஆன கதை !!!



"கலக்கிட்டீங்க சார்" அந்த இளம் கல்லூரி மாணவி ஓடிவந்து கைகுலுக்கிய போதுதான் கென்னடிக்கு நினைவே வந்தது. அரங்கம் அதிர்ந்த கைத்தட்டல்களால் ஆனந்த அதிர்ச்சிக்கு ஆளாகியிருந்தார். 1986ஆம் ஆண்டு. சென்னை ஐஐடி வளாகம். திறந்தவெளி கலையரங்கில் கரகோஷம் விண்ணை அள்ளுகிறது. கென்னடி என்கிற அந்த நடிகனின் நடிப்பில் அசந்துப் போய் மொத்தப் பார்வையாளர்களும் எழுந்து நின்று கைத்தட்டுகிறார்கள். அந்த நாடக விழாவில் பங்கேற்ற கல்லூரி மாணவர்களிலேயே லயோலா கல்லூரி மாணவரான கென்னடிதான் சிறந்த நடிகராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். நடிப்பு என்பது கென்னடிக்கு சிறுவயது கனவு. ஏற்காடு மாண்ட்போர்ட் பள்ளியில் மூன்றாவது படித்துக் கொண்டிருந்தபோது ஸ்டேஜ் பெர்ஃபாமன்ஸ் காட்டி பார்வையாளர்களை அசத்தினார். மேடையில் இருந்தவாறே கைத்தட்டல் சப்தங்களை கேட்பது பெரும் போதை. கென்னடிக்கு அந்த போதை பிடித்திருந்தது. ஒரு நடிகனால் மட்டுமே இவ்வளவு கைத்தட்டல்களை பெற முடியும் என்று கென்னடிக்கு அந்த வயதிலேயே தோன்றியது. 

எனவே, தன்னுடைய எதிர்காலம் நடிப்புதான் என்கிற எண்ணத்தோடே வளர்ந்தார். கலைகளுக்கு ஊக்கம் தரும் சென்னை லயோலா கல்லூரியில் படித்தபோது, எப்போதும் மேடையும் நாடகமுமாகவே திரிந்தார். ஐஐடியில் அவர் சிறந்த நடிகராக தேர்ந்தெடுக்கப்பட்ட போது, சினிமா திரையில் தான் தோன்றும் காட்சியையும், ரசிகர்களின் விசில் சப்தத்தையும் மனதுக்குள் கற்பனை செய்து மகிழ்ந்தார். அதே உற்சாகத்தோடு நண்பனின் பைக்கில் ஏறி பில்லியனில் அமர்ந்தார். கவர்னர் மாளிகை அருகே வலப்புறம் திரும்ப வேண்டும். வாகனங்களே இல்லாத சாலை. இளமையின் வேகத்தில் நண்பன் கொஞ்சம் வேகமாக பைக் ஆக்ஸிலேட்டரை முறுக்கிக் கொண்டிருந்தான். எதிரில் திடீரென ஒரு லாரி. விபத்தை தவிர்ப்பதற்காக வண்டியை வளைக்க 'டமால்'. ரத்த வெள்ளத்தில் நடுரோட்டில் விழுந்தார் கென்னடி. இவர்களை பின் தொடர்ந்து காரில் வந்து கொண்டிருந்த மற்ற நண்பர்கள் பதறியவாறே கென்னடியை தூக்கினார்கள். அரசு மருத்துவமனைக்கு எடுத்துக் கொண்டு ஓடினார்கள். கால்களில்தான் நல்ல அடி. பரிசோதித்த மருத்துவர்கள் ஏதேதோ ஆங்கில மருத்துவ சொற்றோடர்களை சொல்லி பயமுறுத்தினார்கள். முழங்காலுக்கு கீழே எடுத்துவிடுவதுதான் உயிர் பிழைக்க ஒரே வழி என்றார்கள். கென்னடியின் அம்மா கதறிவிட்டார். 

'எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. என் மகன் பழையபடி எழுந்து நடக்க வேண்டும்' என்றுகூறி, அந்த அர்த்தராத்திரியில் சென்னையிலிருந்த ஒரு பிரபலமான தனியார் மருத்துவமனைக்கு கென்னடியை ஆம்புலன்ஸில் போட்டு அழைத்துச் சென்றார்கள். ஒரு நடிகனுக்கு கால்கள் ரொம்ப முக்கியம். கென்னடியின் அம்மா மட்டும் அன்று புத்திசாலித்தனமான முடிவை எடுத்திருக்காவிட்டால், இன்று 'சீயான்' விக்ரம் நமக்கு கிடைத்திருக்க மாட்டார். அந்த விபத்திலிருந்து விக்ரம் மீண்டது பெரிய சாதனை. அவருடைய நண்பர்களும், பெற்றோர்களும் ஊக்கம் கொடுத்து மீண்டும் பழையபடி மாற்றினார்கள். விக்ரம் நடித்த 'தில்' படத்தில் இதே போன்ற காட்சிகளை நீங்கள் கண்டிருப்பீர்கள். போலீஸ் வேலைக்கு முயற்சித்துக் கொண்டிருக்கும் விக்ரமின் கால்களை, ரவுடி போலீஸ் ஒருவர் முறித்து விட்டிருப்பார். குடும்பத்தினரின், நண்பர்களின் ஊக்குவிப்பால் மீண்டும் விக்ரம் கடுமையான பயிற்சிகளுக்கு பிறகு பழையபடி நடப்பார். அவரது வாழ்விலேயே நடந்த சம்பவங்கள், அவர் நடித்த சூப்பர்ஹிட் படத்திலும் இடம்பெற்றது யதேச்சையான ஒற்றுமைதான். ஏனெனில், இதே மாதிரி விபத்தில் இருந்து மீண்ட அனுபவம், 'தில்' படத்தை இயக்கிய இயக்குநர் தரணிக்கும் உண்டு.
அந்த விபத்தினால் விக்ரமின் கனவுகளை கொஞ்சகாலத்துக்கு தள்ளிதான் போடமுடிந்ததே தவிர, முற்றிலுமாக முடக்க முடியவில்லை. அவர் நடக்க விரும்பியதே நடிக்க ஆசைப்பட்டதால்தான். பழையபடி நடக்க ஆரம்பித்தபிறகு ஒரு விளம்பர நிறுவனத்தில் காப்பிரைட்டராக பணியாற்ற ஆரம்பித்தார்.

சில குறும்படங்களில் நடித்தார். தூர்தர்ஷன் சீரியல்களில் தோன்றினார். திரையில் தோன்றும் தன் கனவுக்கு ஏதோ ஒரு தொடக்கம் அமைவதற்காகவே கிடைக்கின்ற எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்தத் தொடங்கினார். வங்கி ஊழியர் ஒருவர் தன் நண்பர்களோடு இணைந்து சின்ன பட்ஜெட்டில் படம் எடுக்க முயற்சித்துக் கொண்டிருந்தார். அவர் மூலமாக வாய்ப்பு கேட்டு விக்ரம் ஹீரோவாக நடித்த முதல் படம் 'என் காதல் கண்மணி'. படம் பாதி வளர்ந்து கொண்டிருந்தபோதே பட்ஜெட் காரணமாக தள்ளாட ஆரம்பித்தது. தன் கனவு கனவாகவே ஆகிவிடுமோ என்று அவர் அஞ்சிக் கொண்டிருந்த சூழலில்தான் பழம்பெரும் இயக்குநர் ஸ்ரீதர், தான் எடுக்கவிருக்கும் படத்துக்காக ஒரு புதுமுக ஹீரோவை தேடிக் கொண்டிருப்பதாக கேள்விப்பட்டார். ஸ்ரீதரை சந்தித்து வாய்ப்பு கேட்டார். அந்த படம்தான் 'தந்துவிட்டேன் என்னை'. 1991ல் வெளிவந்த விக்ரமின் முதல் படமே அந்த ஜாம்பவான் இயக்குநரின் கடைசி படமாக அமைந்துவிட்டது துரதிருஷ்டம். படம், வணிகரீதியாக படுமோசமான தோல்வியை எட்டியது.
எனினும், தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தனாக அடுத்தடுத்து வாய்ப்புகளை தேடும் முயற்சியில் படுதீவிரமாக இருந்தார் விக்ரம். அடுத்த படமும் பெரிய இயக்குநரின் படமாகவே அமைந்தது. இயக்குநர் எஸ்.பி.முத்துராமனின் 'காவல்கீதம்'. இந்த படமும் வெற்றியடையவில்லை. மூன்றாவது படமாக ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் முதன்முதலாக இயக்கிய 'மீரா' அமைந்தது. 

இளையராஜா இசையில் பாடல்கள் சூப்பர்ஹிட். டெக்னிக்கலாக மிரட்டலாக அமைந்த இந்தப் படமும் ஏனோ வசூலில் சோடை போனது. இருப்பினும், விக்ரம் என்கிற நடிகனின் நடிப்பாற்றலை வெளிப்படுத்திய முதல் படமாக இதை குறிப்பிடலாம். அடுத்தடுத்து மலையாளம், தெலுங்குப் படங்களில் நிறைய வாய்ப்புகள் கிடைத்தது. விக்ரமனின் 'புதிய மன்னர்கள்' படத்தில் நடித்துக் கொண்டிருந்த போதுதான் அந்த வாய்ப்பு வந்தது. மணிரத்னம் அலுவலகத்தில் இருந்து அழைத்திருந்தார்கள். யெஸ். 'பம்பாய்' படத்துக்கு மனிஷாகொய்ராலாவோடு நடிக்க முதலில் விக்ரமைதான் தேர்ந்தெடுத்திருந்தார் மணிரத்னம். மனிஷாவோடு விக்ரமுக்கு போட்டோஷூட். இந்தியாவின் மிகப்பெரிய இயக்குநர் தன்னை இயக்கப் போகிறார், நாடறிந்த நடிகை தனக்கு ஜோடி என்பதாலோ என்னவோ மிகவும் நெர்வஸாக இருந்தார். படபடப்பின் காரணமாக மணிரத்னத்துக்கு திருப்தி தரக்கூடிய அளவுக்கு விக்ரமால் பெர்ஃபார்ம் செய்ய முடியவில்லை. மணிரத்னத்தால் தான் நிராகரிக்கப்பட்டதை விக்ரமால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. 

மணிரத்னமே மீண்டும் அழைத்து தன்னை நடிக்க வைக்குமளவுக்கு உயரவேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டார். நடனம், சண்டை, நடிப்பு என்று பயிற்சிகளை மேற்கொண்டார். அப்போது பெரிய நடிகர்களாக உருவெடுத்த அஜித், அப்பாஸ், பிரபுதேவா உள்ளிட்ட இளம் ஹீரோக்களுக்கு டப்பிங்கூட பேசினார். ஆனால்- என்றாவது ஒருநாள் தனக்கான இடம் இந்த சினிமாவில் கிடைத்தே தீரும் என்று உறுதியாக நம்பினார். அமிதாப் பச்சன் தமிழில் தயாரித்த 'உல்லாசம்' படத்தில் அஜித்தோடு, இன்னொரு ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்தப் படத்தில் நடிப்பதற்காக பாலுமகேந்திராவின் 'ராமன் அப்துல்லா' வாய்ப்பை அவர் இழக்க வேண்டியிருந்தது. விக்ரமை துரத்திக் கொண்டிருந்த துரதிருஷ்டம், 'உல்லாசம்' படத்திலும் தொடர்ந்தது. படம், வெற்றிபெறவில்லை. ஆனால்- பாலுமகேந்திராவிடம் உதவியாளராக இருந்த பாலாவின் 'சேது', அவரை மகத்தான நடிகனாக தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு அறிமுகப்படுத்தியது. பத்தாண்டு போராட்டம் நிறைவுக்கு வந்தது. 

சரியாக நடிக்க வரவில்லை என்று நிராகரிக்கப்பட்ட விக்ரம், தேசிய விருது பெருமளவுக்கு பெரும் நடிகராக உயர்ந்தார். 'பம்பாய்' படத்துக்காக எந்த மணிரத்னம் விக்ரமை நிராகரித்தாரோ, அதே மணிரத்னம் விக்ரமை அழைத்து 'ராவணன்' படத்தில் நடிக்க வைத்தார். சரி, கென்னடி எப்படி விக்ரம் ஆனார்? கென்னடியை சிறுவயதில் எல்லோரும் கென்னி என்றுதான் செல்லமாக அழைப்பார்கள். குழந்தையாக இருந்தபோது இந்தப் பெயர் ஓக்கே. வளர, வளர தன்னுடைய கெத்துக்கு கென்னி செட்டாகாது என்று அவருக்கு தோன்றியது. அப்பாவின் பெயர் Albert Victor. அம்மாவின் பெயர் Rajeswari. அப்பாவின் பெயரில் இருந்து 'Vik', அம்மாவின் பெயரில் இருந்து Raவை மட்டும் எடுத்து 'விக்ரம்' என்று தனக்குதானே புனைபெயர் சூட்டிக் கொண்டார். அவரைப் பற்றிய இன்னொரு முக்கியமான விஷயத்தை சொல்ல மறந்துவிட்டோமே? கட்டுரையின் தொடக்கத்தில் ஓர் இளம்பெண் ஓடிவந்து ஐஐடி வளாகத்தில் விக்ரமுடன் கை குலுக்கினாரே, நினைவிருக்கிறதா? யெஸ். அவர்தான் விக்ரமின் மனைவி ஷைலஜா. இருவரும் முதன்முதலாக சந்தித்துக் கொண்டது அவருக்கு நடந்த விபத்துக்கு அரை மணி நேரத்துக்கு முன்பாகதான்.




Share

No comments:

Post a Comment

 
Copyright © 2016. CFE.
Design by Herdiansyah Hamzah. Published by Premium Themes. Powered by Blogger.
Creative Commons License